முதல் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்றால், மாணவர்கள் மே மாதம் நடக்கும் இரண்டாவது தேர்வில் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை எழுதி தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளலாம். இரண்டில் எது சிறந்த மதிப்பெண்ணோ அதுவே இறுதிச் சான்றிதழில் இடம்பெறும்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், மதிப்பீட்டு முறையை நவீனப்படுத்தவும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூன்று முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் மாணவர்களின் கற்றல் முறையை மாற்றியமைப்பதுடன், தேர்வு முடிவுகள் வெளியாகும் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் இனி ஆன்லைனில் திருத்தப்படும்
2026-ஆம் ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்கு 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (OSM) எனும் டிஜிட்டல் முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்துகிறது.
இதன் கீழ், மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினித் திரையில் ஆசிரியர்களுக்குக் காண்பிக்கப்படும். ஆசிரியர்கள் டிஜிட்டல் பேனா அல்லது கணினி மூலம் மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த முறையினால் மதிப்பெண்களைக் கூட்டுவதில் ஏற்படும் பிழைகள் (Totalling Errors) முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளிலிருந்தே விடைத்தாள்களைத் திருத்த முடியும் என்பதால், மதிப்பீட்டுப் பணி மிக விரைவாக முடியும். ஆனால், 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் இந்த ஆண்டு வழக்கம் போல காகித வடிவிலேயே திருத்தப்படும்.
2. 10-ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள்
தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரையின்படி, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதும் வாய்ப்பு 2026 முதல் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஒரே ஒரு தேர்வை நினைத்து மாணவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதைத் தவிர்க்கலாம். பிப்ரவரி மாதத்தில் முதல் தேர்வும், மே மாதத்தில் இரண்டாம் தேர்வும் நடைபெறும். ஒரு மாணவர் இரண்டு தேர்வுகளையும் எழுதினால், அதில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ, அதுவே இறுதி முடிவாக எடுத்துக் கொள்ளப்படும். இது மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
3. வினாத்தாள் அமைப்பில் பெரிய மாற்றம் (Competency-Based Questions)
பாடங்களை மனப்பாடம் செய்து (Rote Learning) தேர்வு எழுதும் பழைய முறையை மாற்றி, மாணவர்கள் பாடங்களை எவ்வளவு ஆழமாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதைச் சோதிக்கும் வகையில் வினாத்தாள்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு வினாத்தாள்களில் சரிபாதி கேள்விகள் (50%) திறன் சார்ந்தவையாக இருக்கும். இதில் நிஜ வாழ்க்கைச் சூழல்கள் குறித்த கேள்விகள் மற்றும் புரிதலைச் சோதிக்கும் வினாக்கள் இடம்பெறும்.
ஒரு மதிப்பெண் கொண்ட அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் 20% கேட்கப்படும்.
நீண்ட விடைகள் எழுதும் பாராம்பரியமான கேள்விகளுக்கான முக்கியத்துவம் 30%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மாணவர்களை வெறுமனே மனப்பாடம் செய்பவர்களாக இல்லாமல், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்க சிபிஎஸ்இ எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளாகும்.



No comments:
Post a Comment