THAMIZHKADAL TODAY NEWS

பிளஸ் 2 வேதியியல் கடினம்: தேர்ச்சி குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10,159 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘வேதியியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் பகுதிகளில் சில கேள்விகள் கடினமாக இருந்ததால் பதில் அளிப்பது சிரமமாக இருந்தது. பல்வேறு எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்தாண்டு வேதியியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும் ‘சென்டம்’ பெறும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறையக்கூடும்.

கணக்குப்பதிவியல் எளிது: அதேநேரம் கணக்குப் பதிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது. 1, 2, 3, 5 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. மெல்லக் கற்கும் மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் இருந்தது.

இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றனர்.

இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் பாடத் தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel