
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 8.27 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்கி 26-ம் தேதி நிறைவுபெறுகிறது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 பேர் எழுதுகின்றனர். இதில் 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99,692 மாணவர்கள், 27,783 தனித்தேர்வர்கள் மற்றும் 281 கைதிகளும் அடங்குவர். மேலும் 7,465 மாணவர்கள் ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர்.
பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 44,624 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் தேர்வு மையங்களில் குடிநீர்,இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டுவரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும்.விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.
அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு,தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களை தொடர்புகொள்ளலாம்.



No comments:
Post a Comment