தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், நிலுவையில் இருந்த கோப்புகள் தொடர்பாக, பல்வேறு துறைகளில் அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் அவசரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில், தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இதையடுத்து, சட்டசபை தேர்தல் தேதிகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், தமிழக அரசு தன்னிச்சையாக எந்த அரசாணையையும் பிறப்பிக்க முடியாது. அத்தியாவசிய தேவை இருப்பின், அது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு துறைகள் வாயிலாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பலவற்றுக்கு இன்னும் அரசாணைகள் வரவில்லை. திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாது, நிர்வாக நடைமுறை தொடர்பாகவும் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன. ஆட்சிக் காலம் முடிவதற்குள் அரசாணை பிறப்பிக்க வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
இதனால், தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வனத்துறை, பதிவுத் துறை, சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு, அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கோப்புகள் அடிப்படையில், வரைவு அரசாணைகள் தயாரிக்கும் பணிகள், தலைமை செயலகத்தில் இரவு வரை நடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும், 20 முதல், 60 அரசாணைகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில், அந்தந்த துறை அதிகாரிகள் பரப்பரப்பாக வேலை செய்து வருவதாக, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



No comments:
Post a Comment