/indian-express-tamil/media/media_files/2026/03/25/govt-school-girls-2026-03-25-04-46-26.jpg)
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து, தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2026-27-ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 4.11 கோடி பாடநூல்களை அச்சிட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் கல்வி நிறுவனங்களில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவ, மாணவியருக்குத் தேவையான பாடநூல்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தயாரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விலையில்லாமலும், தனியார் பள்ளி மாணவர்களுக்குக் குறைந்த விலையிலும் வழங்கப்படுவது வழக்கம்.
புதிய கல்வியாண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட 4.11 கோடி பாடநூல் இலக்கில், தற்போது வரை சுமார் 88 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 3.11 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்காக 2.71 கோடி புத்தகங்களும், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் அந்தந்த மாவட்டக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடக்கப்பள்ளியின் முதல் மூன்று வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், அவற்றுக்கான புத்தகத் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சென்னையில் பாடநூல்கள் தேவைப்படுவோர் நுங்கம்பாக்கம் டி.பி. ஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகிய இடங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment