
தமிழகத்தில், 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான புதுப்பித்தல் அங்கீகாரத்தை அரசு வழங்காததால், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட நிர்வாக பணிகள் முடங்கிஉள்ளன.தமிழகத்தில், 15,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், 68 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. கட்டட உறுதித்தன்மை, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதார சான்றிதழ் மற்றும் கல்வித் தர நிலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்து, தொடர் அங்கீகாரம் வழங்கப்படும்.சான்றுகளை பெற்று, டி.இ.ஒ., அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பித்து, இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.தமிழகம் முழுதும், 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: அனைத்து சான்றுகளை யும் முறையாக சமர்ப்பித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் பல ஆண்டு களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மாதந்தோறும் மாவட்ட வாரியாக சிறப்பு முகாம் நடத்தி, தனியார் பள்ளிகளுக்கு துரித முறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை முறையாக வழங்கவில்லை. புதுப்பித்தல் அங்கீகாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தமிழகம் முழுதும், 8,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் செயல்படுகின்றன.அங்கீகாரமில்லாததால் மாணவர்களுக்கு, டி.சி., வழங்குதல், பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., செய்தல், லோன் வாங்குதல், புதிய கட்டடங்களுக்கு கட்டட திட்ட அனுமதி அனைத்தும் தடைபட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் செயலற்ற தன்மையே, இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.










No comments:
Post a Comment