
தரமான சீருடைக் கனவு இப்போதாவது நனவாகுமா?
எழுத்தாளர் மணி கணேசன்
அண்மையில் புதிய இடைக்கால நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான முதல்வரின் பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய சீருடைக்கான முன்மொழிவை வழங்கியுள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஒரு கல்வியாண்டில் ஒற்றைச் சீருடை என்பதில் தொடங்கி பிறகு இரண்டு சீருடைகள் வழங்கும் நடைமுறையில் இருந்து வந்தது. அதன்பின் பருவத்திற்கு ஒன்று என்ற வகையில் மூன்று வண்ணச் சீருடைகள் தற்போது வரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது அறியத்தக்கது. அதாவது 1 - 5, 6 - 8, 9 & 10, 11 & 12 வகுப்புகளுக்கென நான்கு பிரிவுகளில் நான்கு வகையான வண்ணங்களில் பள்ளிச் சீருடைகள் பள்ளித் திறப்பு முதல்நாளில் கிடைக்கப் பெறத்தக்க வகையில் அரசால் வழங்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
அதேவேளையில், ஐந்து வயது குழந்தை முதற்கொண்டு பதின்பருவ பிள்ளைகள் வரை தினந்தோறும் அணியும் அரசின் இலவச வண்ணச் சீருடைகள் மேலும் அவற்றின் துணிகள் தரமானதாகவும் எளிதில் கிழியாமல் நீண்ட நாள் உழைக்கக் கூடியதாகவும், வெளுத்துப் போகாததாகவும், பொத்தான்களும் ஊக்குகளும் மலிந்ததாக இல்லாமல் அதிக வலுவுடன் நீண்ட காலம் இருக்கக் கூடியதாகவும் இருப்பது அவசியம் என்று பல தரப்பினரும் தொடர்ந்து பள்ளிப் பிள்ளைகள் நலனுக்காகக் குரல் கொடுத்து வந்தது இங்கு நோக்கத்தக்கது.
ஆட்சிகள் மாறினாலும் இந்த காட்சிகள் மாறாமல் இருந்தது வேதனைக்குரியது. வேண்டா வெறுப்புக்குப் பிள்ளையைப் பெற்று அதற்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்த கதையாக இந்த இலவச வண்ணச் சீருடைகள் மிகவும் மலிவானதாக எளிதில் கிழியத் தக்க வகையில் இருந்ததும் அவற்றை மாணவ மாணவியர் வேறு வழியின்றி அணிந்து வந்ததும் பரிதாபகரமானது. இந்த அவல நிலை கட்டாயம் மாற அல்லது மாற்றப்பட வேண்டும் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களின் நீண்ட நாள் கனவும் கோரிக்கையும் ஆகும்.
இவர்களுள் வெகு சிலர் மட்டுமே வெளிச் சந்தையில் விற்கப்படும் தமக்குரிய ஆயத்த ஆடை வடிவிலான பள்ளிச் சீருடை ஒத்த வண்ணச் சீருடையை விலை கொடுத்து வாங்கி அணிந்து வரும் நோக்கும் போக்கும் காணப்படுகிறது. பெரும்பாலான பள்ளிக் குழந்தைகளும் பதின்பருவ பெண் பிள்ளைகளும் செய்வதறியாது குடும்ப வறுமை மற்றும் ஏழ்மையைக் கவனத்தில் கொண்டு முழுக் கவனத்தையும் படிப்பில் செலுத்த இயலாமல் துயருறும் நிலைக்குக் கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைத்து நல்ல தரமான, நீண்ட காலம் உழைக்கத் தக்க மாணவர்கள் மனம் கவரும் வண்ண முச்சீருடைகள் வழங்கி கல்வி நலன் காத்திட வேண்டும் என்பது ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் நெடுங்கால கனவாகும்.
ஏனெனில், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மாணவர்களின் உள்ளம் கவர்ந்த மக்கள் நல அரசாக தற்போதைய ஆட்சியில் இதுபோன்ற மாணவர் நலன் சார்ந்த நலத்திட்ட உதவிகள் ஏனோதானோவென்று இல்லாமல் நல்ல பயனுள்ள நனவாக ஆக வேண்டியது இன்றியமையாதது. ஆள் பாதி ஆடை மீதி என்பதற்கேற்ப தரமான சீருடை வழங்குவதை முதன்முறையாக இந்த அரசு முன்னெடுப்பதே சாலச்சிறந்தது. மட்டுமன்றி ஆகச் சிறந்ததுமாகும்.
எழுத்தாளர் மணி கணேசன்
No comments:
Post a Comment