Subscribe Us

Saturday, August 29, 2026

தேர்வு முறையில் என்ன மாற்றம் வேண்டும்? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

NTA question paper 4 tier checking: மேலும், 1800-180-4747 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த ஆலோசனை நடவடிக்கையில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


NTA மறுசீரமைப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் உயர்மட்டக் குழு; யோசனைகளைப் பகிர்வது எப்படி?

நாட்டின் பொதுத் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் தேர்வு தொடர்புடைய தரப்பினரிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டு வருகிறது. இதற்காக நீலகேணி தலைமையிலான உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொதுத் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக, தேர்வர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் அளிக்கலாம்.

எப்படி கருத்துகளை தெரிவிப்பது?

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் இதற்கான பொதுக் கருத்துக்கணிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக examreforms-taskforce.dopt.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்க விரும்பும் செய்திகள்

தேர்வு முறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை, வினாத்தாள் தயாரிப்பு மற்றும் சரிபார்ப்பை எவ்வாறு மேம்படுத்தலாம், தேர்வுகளில் பாதுகாப்பை எவ்வாறு அதிகரிக்கலாம், முறைகேடுகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளை வழங்கலாம்.

மேலும், 1800-180-4747 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த ஆலோசனை நடவடிக்கையில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஏன் இந்த ஆலோசனை?

கடந்த சில ஆண்டுகளில் தேசிய அளவிலான முக்கியமான போட்டித் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக நீட்-யுஜி வினாத்தாள் கசிவு, யுஜிசி-நெட் தேர்வு வினாத்தாள்களில் ஏற்பட்ட பிழைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மீது கேள்விகளை எழுப்பின.

இதையடுத்து, தேசிய தேர்வு முகமை (NTA)-யில் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

என்.டி.ஏ-வின் தேர்வு குழுக்களில் இடம்பெற்றிருந்த சுமார் 600 நிபுணர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நிபுணர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

வினாத்தாள்களில் தகவல் சார்ந்த பிழைகள், மொழிப் பிழைகள், மொழிபெயர்ப்பு மற்றும் வடிவமைப்பு தொடர்பான தவறுகளை கண்டறிந்து சரிசெய்யும் வகையில் நான்கு அடுக்கு சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் சுமார் 20 முதல் 25 அதிகாரிகள் என்.டி.ஏ-வில் சேர்க்கப்பட உள்ளனர்.

தொழில்நுட்பம், நிதி, தகவல் பாதுகாப்பு, தேர்வு பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் உளவியல் அளவீடு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு தொழில்முறை தலைமைப் பொறுப்புகளும் நிரப்பப்படுகின்றன. இணையப் பாதுகாப்பு, உளவியல் அளவீடு மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு போன்ற துறைகளில் தனியார் துறை நிபுணர்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

என்.டி.ஏ-வுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

இதற்கிடையில், என்.டி.ஏ-வின் நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய காவல் பணி அதிகாரியான ரவி குமார் சிங், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரசன்ன வெங்கடேஷ் வி. ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2016-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான அமித் சாம்தாரியா, இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அதிகாரிகள் நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் தங்களது பொறுப்புகளை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கம்

என்.டி.ஏ-வின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சமீபத்திய யுஜிசி-நெட் வினாத்தாள்களில் கண்டறியப்பட்ட பிழைகளுடன் தொடர்புடையது அல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்.டி.ஏ. அலுவலகங்கள் ஒக்லாவில் இருந்து புதிய வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளன. பாதுகாப்பை அதிகரிக்க மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

என்.டி.ஏ.-வின் ரகசியப் பணிகளிலும் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. முக்கியமான பணிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், இணையத்துடன் நேரடியாக இணைக்கப்படாத கணினி அமைப்புகள் மற்றும் பணியாளர்கள் தங்களது மின்னணு சாதனங்களை குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைக்கும் கட்டாய நடைமுறை உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பொது மக்களின் கருத்துகள் முக்கியம்

தேர்வு வினாத்தாள் தரம், பாதுகாப்பு, பொறுப்புணர்வு மற்றும் முக்கியமான போட்டித் தேர்வுகளை நடத்தும் முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த பொதுக் கருத்துக்கேட்பு நடத்தப்படுகிறது.

தேர்வு முறையில் மாற்றம் தேவை என்று நினைக்கும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை மத்திய அரசிடம் நேரடியாக தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed