/indian-express-tamil/media/media_files/2026/08/07/secretariate-2-2026-08-07-22-14-58.jpg)
அரசு கல்லூரிகளில் 112 இணைப் பேராசிரியர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு: தமிழக அரசு அரசாணை
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 112 இணைப் பேராசிரியர்களுக்கு இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு மற்றும் பணியமர்த்தல் வழங்கி தமிழக உயர்கல்வித்துறை அரசாணை (எண்.222 உயர்கல்வித் துறை, நாள்:ஆக.31) வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, பதவி உயர்வு பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேர்வது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் பொன்னையா அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்:
அரசாணையின்படி 2-ம் நிலை கல்லூரி முதல்வர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ள இணைப் பேராசிரியர்களைத் தற்போதைய பணியிலிருந்து உடனடியாக விடுவித்து, அவர்கள் ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில் விரைந்து பணியேற்க சார்ந்த கல்லூரி முதல்வர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தற்போது கல்லூரி முதல்வர் பதவியில் முழு கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வரும் பதவி உயர்வு பெற்ற இணைப் பேராசிரியர்கள், தங்களது முதல்வர் பொறுப்புகளைப் புதிதாகப் பொறுப்பேற்கும் முதல்வர்களிடமோ அல்லது கல்லூரியின் பணி மூப்பில் மூத்த உதவி / இணைப் பேராசிரியர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தகுதியான மூத்த பேராசிரியர்கள் இல்லாத பட்சத்தில், கல்லூரி நிதியாளரிடமும்; நிதியாளரும் இல்லாத பட்சத்தில் சார்ந்த கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடமும் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பணி விடுவிப்பு பெற வேண்டும்.
தற்போது மாற்றுப்பணியில் (Deputation) முதல்வர் பதவியின் முழு கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வரும் ‘பதவி உயர்வு பெறாத’ இணை / உதவிப் பேராசிரியர்கள், தங்களது மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்யக் கோரும் விண்ணப்பங்களை உடனடியாக "tndcejsection@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.