அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அவ்வப்போது ஏற்படும் விரிவுரையாளர் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் : கல்வியாளர்கள் கோரிக்கை


வேலூர்: அவ்வப்போது ஏற்படும் விரிவுரையாளர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி அரசு பாலிடெக்னிக் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கும் வகையில் உரிய விதிகளை அரசு வகுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 1,33,569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட தேர்வு விவகாரத்தில் வினாத்தாளில் முறைகேடு செய்து 196 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறி தேர்வை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. விண்ணப்பங்கள் பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்கள் பதிவு செய்ய வரும் 12ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், ஆன்லைன் மூலம் தேர்வு வரும் மே முதல் வாரம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2017ல் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் 600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தேர்வு செய்யப்பட்டபோது 2017ம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கூறியிருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகியன சமீபத்தில் நடத்திய தேர்வுகள் தொடர்பாக எழுந்து வரும் புகார்கள் இன்றி மேற்கண்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த வேண்டும். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகும் இடங்களை அதற்கேற்ற சூழலில், தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்துவதை விட தகுதியானவர்களை உடனுக்குடன் நியமிப்பதற்கு தேவையான சிறப்பு விதிகளை வகுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு உடனுக்குடன் காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தேர்வு நேரங்களில் சிக்கல் ஏதுமின்றி மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.