Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 13, 2018

பி.இ. சேர்க்கை: சான்றிதழ் சரிபார்ப்பு நாளையுடன் முடிகிறது




பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைய உள்ளது. சென்னை மையத்தில் மட்டும் ஜூன் 17 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 6-ஆம் தேதி முதல் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வைத் தொடங்க உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தொடங்கியது. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை மையத்தைத் தவிர மற்ற அனைத்து உதவி மையங்களிலும் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.



எப்போது வேண்டுமானாலும்...: கடைசி நேர நெரிசலைக் குறைப்பதற்காக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு சம்பந்தப்பட்ட உதவி மையத்தில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அவ்வாறு மாணவர்கள் வரமுடியவில்லை எனில், புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் தங்களுடைய பெற்றோரிடம் கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பலாம்.
இல்லையெனில், கடைசி நாளான வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஊட்டி மையத்தைத் தவிர பிற மையங்களில் ஏதாவது ஒரு மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.



இந்த இரண்டாவது வாய்ப்பையும் தவறவிடும் மாணவர்கள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஜூன் 17-ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் சான்றிதழ் சரிபார்ப்புக்காகப் பங்கேற்கலாம் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிய தொலைபேசி எண்கள்: மேலும் சந்தேகங்களுக்கு 044 - 22359901, 22359920 ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.