Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

பிளஸ்-2 துணைத் தேர்வு: செப்.24 முதல் தொடக்கம்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் நேரடி தனித் தேர்வராக எழுத முடியாது


பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 24-இல் தொடங்கும் இந்த துணைத் தேர்வு அக்டோபர் 4-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.



பிளஸ்-1 தேர்வு பொதுத் தேர்வாக மாற்றப்பட்டு நடத்தப்பட்டு வருவதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி தனித் தேர்வராக பிளஸ்-2 துணைத் தேர்வை எழுத முடியாது எனவும் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ்-2 பொதுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறை பாடத் திட்டத்தின்படி ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதி தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமே, இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழக அரசு 2017 அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை (1டி) எண்.573-இன் படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித் தேர்வராக பிளஸ்-2 தேர்வு எழுத இந்தப் பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது.



ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பிக்கலாம்: துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய செப்டம்பர் 1 கடைசி நாளாகும். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் ரூ. 1000 கூடுதல் கட்டணம் செலுத்தி செப்டம்பர் 3, 4 ஆகிய இரு தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50 தேர்வுக் கட்டணமாகவும், இதர கட்டணமாக ரூ. 35 சேர்த்து செலுத்தவேண்டும். ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்களை பணமாகச் செலுத்தவேண்டும்.

அரசுத் தேர்வுகள் சேவை மைய விவரம் உள்ளிட்ட விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.