Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 19, 2018

நிகர்நிலை பல்கலை. எம்பிபிஎஸ் காலியிடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும்


நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஏற்படும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான காலியிடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:



தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான மூன்றாம்கட்ட கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்விலும் நிரப்பப்படாத இடங்கள், வரும் 26 -ஆம் தேதிக்குப் பிறகு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமே ஒப்படைக்கப்பட்டு, சில வரையறைக்கு உட்பட்டு அவற்றின் விருப்பப்படி நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படும். 

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனால், தகுதியிருந்தும் பணம் இல்லாதவர்களால் இப்பல்கலைக்கழகங்களில் சேர முடிவதில்லை. அவ்வாறு யாரும் சேராத இடங்களை விற்று லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே மீத இடங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. 

இதற்கு வசதியாகவே, ஒரு பல்கலையில் 100 இடங்கள் காலியாக இருந்தால், 1,000 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர். நீட் தேர்வில் கூடுதலான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பணம் இல்லாததால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர முடியாமல் வெளியேறும் நிலையில், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் தங்களிடமுள்ள பணத்தைக் கொண்டு படிப்பில் சேருவர். இதற்காக தரகர்கள் மூலம் பேரம் பேசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.




இது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பது மட்டுமின்றி மருத்துவக் கல்வியின் தரத்தையும் குறைத்துவிடும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைப்பதுதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தில் நிரப்பப்படாமல் போகும் 700 -க்கும் மேற்பட்ட மருத்துவ, பல் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.