
மண்பானையோட அருமையை உணர்ந்து, இன்னைக்கு நட்சத்திர ஹோட்டல்கள்கூட மண்பானைச் சமையல்ல அசத்துறாங்க. நகரங்கள்ல சில ஓட்டல்கள்ல, 'மண்பானை சமையல்னு' போர்டுவெச்சு மக்களை ஈர்க்குறாங்க. இப்படி ஒருபக்கம் மண்பானை மேல மக்களுக்குக் கவனம் திரும்பியிருக்கிறது வரவேற்கக்கூடியதுதான். அதேமாதிரி எல்லாரும் நம் முன்னோர்கள் அனுபவத்துல சொன்னதை உணரணும்.
அதுமட்டுமில்லாம, மண்பானைத் தண்ணியைக் குடிச்சா நோய் எதுவும் வராது; அதனால மண்பானையைப் பயன்படுத்துங்க.
மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.
பொதுவாக, உணவைச் சமைக்கும்போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll) எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும்போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.
மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும். இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.
மண்பானையில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவையில்லை. மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மேலும், மண்பானை நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.





