கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் !

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்துடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சந்தான கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவரும் வகையில், அரசு தரப்பிலிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.







இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சந்தான கிருஷ்ணன், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிச.10 ஆம் தேதி முதல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 7200 பேர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருவதாகவும், 19வது நாளான இன்று அரசு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்ததையடுத்து அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தார்.






மேலும், இந்த பேச்சுவார்த்தையில் வருவாய்த்துறை அமைச்சர் தங்களது கோரிக்கைகளை இரண்டாக பிரித்து உடனடியாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளான உட்பிரிவில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை அமல்படுத்துதல், நகர நில அளவை கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்டவற்றிக்கு ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நீண்டநாள் கோரிக்கைகளான அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






மேலும், 5 ஆம் கட்டமாக நடக்கும் இந்த பேச்சுவார்த்தையானது சுமூகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து தங்களது சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். போராட்டத்தின்போது பணிக்கு செல்லாத நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யாமல் நிதித்துறையுடன் ஆலோசித்து சுமூகமான முடிவை கொடுப்பதாகவும், காலியாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவும் வழிவகை செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Share:

Categories