கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு


திருப்பத்தூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ர.கௌரிசங்கர் ஆகியோர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் வட்டம் என்ற பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வழிபாட்டில் நிலைபெற்றிருந்த கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர். இது குறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டுமுறை என்பது இயற்கையை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. பஞ்ச பூதங்கள், மரங்கள் வழிபடு பொருள்களாகப் பாவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. அவ்வரிசையில் இடம்பெற்றதே கொற்றவை வழிபாடாகும்.

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமான கொற்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகாரக் காப்பியமாகும். கொற்றவை வழிபாட்டு முறையை விளக்கும் வகையில் தனியாக ஒரு காதையையே இளங்கோவடிகள் வடித்துள்ளார். மதுரைக் காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டம், திம்மாம்பேட்டையில் காணப்படும் கொற்றவை சிற்பமானது பாலாற்றின் கரையோரம் பழமையான துரிஞ்சி மரத்தினடியில் 5 அடி உயரமும் 3 1/2 அடி அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. கொற்றவை நீண்ட காதுகளுடனும் எட்டுக் கரங்களுடனும் காட்சியளிக்கிறாள். கரங்களில் வில், வாள், திரிசூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. இடது காலைத் தரையிலும் வலது காலை அமர்ந்த நிலையில் உள்ள மானின் மீதும் வைத்திருக்கிறாள். இடது காலின் அருகில் எருமைத் தலை வடிக்கப்பட்டுள்ளது.
இச்சிற்பத்தை இப்பகுதி மக்கள் பைரவநாதர் என்று அழைக்கின்றனர். ஆனால் இச்சிற்பத்தில் உள்ளது பைரவர் அல்ல. இச்சிற்பத்திற்குப் பெண்களே பூஜை செய்கின்றனர். மேலும் சைவ உணவுகளையே படையலாகப் படைக்கின்றனர்.

வறட்சிக் காலங்களில் உழவர்கள் தானியங்களைக் கொண்டுவந்து இச்சிற்பத்தின் அருகே வைத்துவிட்டு அதற்குப் பதிலாக இங்குள்ள மண்ணை அள்ளி எடுத்துச் சென்று தங்களது விவசாய நிலங்களில் தூவி விடுவர். அவ்வாறு செய்தால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்று நம்புகின்றனர். இச்செய்திகள் அனைத்தும் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த இயற்கை சார் வழிபாட்டு முறைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. இக்கொற்றவை சிற்பமானது தமிழர்களின் தாய்வழிச் சமூக மரபின் எச்சமாகும் என்றார் பிரபு.


இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான சேகர் கூறுகையில் இச்சிற்பமானது பிற்காலச் சோழர்களின் தொடக்கக் காலமான கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்.மேலும் இச்சிற்பத்தில் பல்லவர் காலக் கலைக்கூறுகள் காணப்படுகின்றன என உறுதிப்படுத்தினார். இச்சிற்பமானது கால ஓட்டத்தில் உராய்ந்து பொலிவிழந்து காணப்படுகிறது. தமிழர்களின் தாய்த் தெய்வமாகக் கருதப்படும் இக்கொற்றவை சிற்பம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார் அவர்.
Share:

Total Pageviews

Categories