
விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய இரு வங்கிகளையும் பரோடா வங்கியுடன் ஒன்றிணைத்ததன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகள் வழங்கப்படவுள்ளன.
பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை பரோடா வங்கியுடன் இணைக்கும் ஒப்பந்தத்துக்கு, மத்திய அரசு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒருங்கிணைப்பு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இது தொடர்பாக விஜயா வங்கி பொது மேலாளர் வி.கல்யாண், பரோடா வங்கி பொது மேலாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா, தேனா வங்கி துணைப் பொது மேலாளர் கணபதி ராமன் ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த ஒருங்கிணைப்பு மூலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், மூன்றாவது பெரிய நிதியளிக்கும் நிறுவனமாகவும் பேங்க் ஆஃப் பரோடா உயர்ந்துள்ளது. மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் வங்கியின் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த ஒருங்கிணைப்புப் பயனளிப்பதாக அமையும்.
இந்தச் செயல்பாடு இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட உதவும். மூன்று வங்கிகளும் இணைந்துள்ளதால், இவ்வங்கிகளின் ஊழியர்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த நடவடிக்கை அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தையே வழங்கும்.
இந்த ஒருங்கிணைப்பின் மூலம் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் அனைத்துக் கிளைகளும் ஏப்.1-ஆம் தேதி முதல் பரோடா வங்கியின் கிளைகளாக செயல்படும்.
12 கோடி வாடிக்கையாளர்கள்: ஒருங்கிணைக்கப்பட்ட பரோடா வங்கி 9,500-க்கும் மேற்பட்ட கிளைகளையும், 85 ஆயிரம் ஊழியர்கள், 12 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரும் வங்கியாக உருவெடுத்துள்ளது.
இந்த வங்கிகளின் வர்த்தகம் ரூ. 15 லட்சம் கோடியாகவும், வைப்பு நிதி ரூ. 8.75 லட்சம் கோடியாகவும், கடன் மதிப்பு ரூ. 6.25 லட்சம் கோடியாகவும் உள்ளது. மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாடிக்கையாளர்களுடனான தொடர்பு மேலும் விரிவுபடுத்தப்படும்.
ஒருங்கிணைப்புக்குப் பின்னரும், வழக்கம்போல விஜயா மற்றும் தேனா வங்கி கணக்குதாரர்கள் தொடர்ந்து தங்களின் வங்கிக்கிளைகளில் பரிவர்த்தனைகளைச் செய்யலாம். தற்போதைய வங்கிக்கணக்கு, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம், காசோலை, ஐஎஃப்எஸ்சி, எம்ஐசிஆர் குறியீடுகள், பற்று-கடன் அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஏப்ரல் 2019 முடிவுக்குள், பணம் போடுதல், எடுத்தல், குறிப்பிட்ட அளவிலான பணப் பரிவர்த்தனை, இருப்பு விசாரணை, ஸ்டாப் பேமெண்ட் ஆர்டர், ஸ்டேட்மென்ட் ஆகிய வசதிகளை ஒருங்கிணைக்கப்பட்ட பரோடா வங்கி வாயிலாக பெறமுடியும்.
இந்த மூன்றில் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பிற இரு வங்கியின் ஏடிஎம்களில் இனி கட்டணம் ஏதுமின்றி பணம் எடுக்கமுடியும்.
மூன்று வங்கிகளின் சேவைகளிலும் சிறந்த சேவைகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பல சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
மூன்று வங்கிக் கிளைகளில் இனி எங்கிருந்தும், வாடிக்கையாளர்கள் தாம் விரும்பிய சேவையைப் பெறும் வகையில், சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்றனர்.





