Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 9, 2019

"நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை" - பிரகாஷ் ஜவடேகர்


அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கமுடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வு தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், “தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். பல மாநிலங்களுக்கும் தமிழகம் எடுத்துக்காட்டாக உள்ளது. டிஜிட்டல் முறை கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குகிறது. நீட் தேர்வில் மாணவர்களிடம் சோதனை நடத்துவது என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நடத்தப்படுகிறது. நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன.


இந்நிலையில் நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. எனவே தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் விலக்கு அளிப்பது என்பது இயலாதது. நீட் தேர்வினால் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் நிலை குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.


முன்னதாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அளிக்க வேண்டும் என ஆளும் அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.