Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 9, 2019

TET - தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பாதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்குமாறு கடந்த மே 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கூடாது என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தை கூறி, தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.


இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின்படியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், 2011 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2012, 2013, 2014, 2017ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்க மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது. அதன் பின் காலக்கெடுவை நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.