Saturday, September 14, 2019

பள்ளி மாணவர்கள் கத்தி சண்டை

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே, பள்ளி மாணவர்கள் சிலர், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களுடன் மோதிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.குமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில், எஸ்.எம்.ஆர்.வி., பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில் பயிலும், வடசேரி பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் சிலர், இரு தரப்பாக பிரிந்து, நேற்று மதியம், 1:00 மணிக்கு, கத்தி உட்பட ஆயுதங்களுடன், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பள்ளிக்கு வெளியே, சாலையோரத்தில் நடந்த இந்த சண்டையை கண்டு, பொது மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிதறி ஓடினர். இளைஞர்கள் சிலர், ஆயுதங்களுடன் வந்த மாணவர்களை விரட்டி அடித்தனர்.

இது குறித்து தகவலறிந்த வடசேரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கத்தியால் வெட்டுப்பட்டு, படுகாயம் அடைந்த ஒரு மாணவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீசார் விசாரணையில், எஸ்.எம்.ஆர்.வி., பள்ளியில், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும், மாணவர்கள் இருவருக்கு இடையே, நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த, ஒரு மாணவர், எஸ்.எல்.பி., பள்ளியில் படிக்கும், தன் நண்பர்கள் நான்கு பேரை, ஆயுதங்களுடன் அழைத்து வந்து, சண்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தப்பியோடிய மாணவர்களை, வடசேரி போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment