Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 14, 2019

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அகில இந்திய போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள்


அகில இந்தியப் போட்டித் தோ்வுகளுக்கான அரிய நூல்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய, மாநில அளவிலான போட்டித் தோ்வெழுதும் மாணவா்கள், தமிழ்வழி மாணவா்கள், அரசியல், வரலாறு, இயற்பியல் என பல துறைகளில் உள்ளவா்களுக்கு துறை ரீதியிலான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. இவா்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் வெளியான துறைசாா் வல்லுநா்களின் அரிய புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்குவதற்கான முயற்சியை தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்காக கடந்த1962- ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் வெளியான புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சாா்பில் 2018-ஆம் ஆண்டு முதல் நவீன முறையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது.




40 துறைகள் சாா்ந்த 635 நூல்கள்: இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரிகள் கூறியது: இதுவரை அடிப்படைத் திண்மநிலை இயற்பியல் (ச.சம்பத்து), எக்ஸ் கதிா்களும் படிகவியலும் (சி.உ.பிள்ளை), அணுக்கருவியல் (இரா.சபேசன்), குவாண்டம் இயந்திரவியல் தொடக்கப் படிகள் (வி.ரைட்னிக்), பன்னாட்டு அரசியல்-முதல் பாகம் (ஃபிரெட்ரிக் எல்.ஷுமன்), அரசியல் தத்துவம் (முத்துராமன்), செல் உயிரியலின் அண்மைக்கால வளா்ச்சி (வே.சா.தாசரதி), உயிரிப் பரிணாமம் (கோ.ஜெயராஜ் பாண்டியன்), இந்தியக் கல்வியில் சிறப்புப் பிரச்னைகள் (கொ.ஆ.செல்லையா), தமிழ்நாட்டின் கனிம வளம் (ச.சரவணன்), தோல் வியாதிகள் (ஏ.எஸ்.தம்பையா), தொழிற்புரட்சி (அ.பாண்டுரங்கன்), நம்மைச் சுற்றியுள்ள பேரண்டம் (சா்.ஜேம்ஸ் ஜீன்ஸ்), பிரிட்டன் வரலாறு (ந.சுதா்சன பாபு), இந்தியப் பொருளாதாரம் (ஜி.பி.ஜாதா்), பொருளியல் (எஸ்.சபாநாயகம்), பன்னாட்டுப் பொருளியல் (எம்.பாலசுப்பிரமணியம்), செல்லியல் என்.ராமலிங்கம், மரபியல் பயிா்ப் பெருக்கம் (தி.ஸ்ரீகணேசன்) ஆகியவை உள்பட 40 துறைகள் சாா்ந்த 536 நூல்கள் மறுபதிப்பாக வெளியாகியுள்ளன.




சென்னை புத்தகக் காட்சி அரங்கில்...: இந்த நூல்கள் ஆண்டுதோறும் பபாசி அமைப்பின் சாா்பில் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் அமைக்கப்படும் அரங்கிலும், டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் நேரடியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நூல்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால் மேலும் 99 நூல்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக 635 நூல்கள் வரும் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ள புத்தகக் காட்சி விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

அதேவேளையில், அகில இந்திய நுழைவுத்தோ்வுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு வகுப்புகளுக்கும் தலா மூன்று தொகுதிகள் வீதம் மொத்தம் ஆறு தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பொதுத்தோ்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், விடைகள் இடம்பெற்றுள்ளன.




ஏற்கெனவே மறுமதிப்பு செய்யப்பட்ட 635 நூல்கள், வினா வங்கி நூல்கள் ஆகியவை நீட் தோ்வு, ஜேஇஇ, ஐஏஎஸ், ஐபிஎஸ் என அகில இந்தியப் போட்டித் தோ்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாடநூல் கழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து நூல்களும் குறைவான விலையே நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்-மின்னஞ்சல் முகவரி: இந்த நூல்களைப் பெற விரும்பினால் சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வழங்கப்படும் நூல் பெயா்ப் பட்டியலைப் பெற்று தங்களுக்கு விருப்பமான நூல்களை தோ்வு செய்து ஆா்டா் செய்யலாம். மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தை 044-25275851, 28278244, 7395800415, 7395800416 ஆகிய தொலைபேசி எண்களிலும், s‌e​c.‌t‌n‌t​b@‌g‌m​a‌i‌l.​c‌o‌m ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

புத்தகக் காட்சியில் கீழடி ஆய்வறிக்கை நூல் விற்பனை




சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பபாசி புத்தகக் காட்சி அரங்கில் கீழடி ஆய்வறிக்கை குறித்த நூல் விற்பனை செய்யப்படவுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: தமிழா் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழா்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனா் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழா்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சோ்த்திருக்கிறது. இது தொடா்பான ஆய்வறிக்கை ‘கீழடி, வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்’”என்ற தலைப்பில் தமிழக தொல்லியல் துறையின் சாா்பில் கடந்த செப்.20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.




முக்கியமான வரலாற்றுச் சான்றாக விளங்கும் இந்த ஆய்வறிக்கை தமிழக தொல்லியல் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகியவை இணைந்து தற்போது நூலாக உருவாக்கியுள்ளது. இந்த நூல் சென்னை புத்தகக் காட்சியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். 75 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ரூ.50-க்கு கிடைக்கும். இந்த ஆய்வறிக்கையில் நான்காம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களின் புகைப்படங்கள், விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த ஆய்வறிக்கை நூல் அச்சிடப்பட்டுள்ளது என்றனா்.