Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 7, 2020

ஆதார் அடிப்படையில் உடனடி பான் எண் பெறும் வசதி இந்த மாதம் துவக்கம்



புதுடெல்லி: உடனடியாக மின்னணு பான் எண் வழங்கும் திட்டம் இந்த மாதம் துவக்கப்பட உள்ளது என, மத்திய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார். பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம். ஆனால், கடந்த ஜனவரி 27ம் தேதி புள்ளிவிவரப்படி, 30.75 கோடி பான் எண்கள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. 17.58 கோடி பான் எண்கள் இணைக்கப்படவில்லை.



இவற்றை இணைக்க அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியதாவது: ஆதார் அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் நடைமுறை செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. எனவே, இந்த மாதமே இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.




இதற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது. வருமான வரி இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். உடனே ஆதாருடன் இணைந்த மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். அதை வைத்து அப்போதே ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு மின்னணு பான் எண் வழங்கப்படும். இதை விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்படி, வழக்கமான முறையில் பான் எண் விண்ணப்பத்தில் அதிக விவரங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டியதில்லை. ஆதார் விவரங்களே போதுமானது. வருமான வரி செலுத்துவோருக்காக, நம்பிக்கை அடிப்படையிலான நடைமுறை அவசியம். இதன்படி, நேர்மையாக வரி செலுத்துவோர் ஒரு போதும் துன்புறுத்தப்பட மாட்டார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே தீர்வு காணப்படும் என்றார்.