Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 18, 2020

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்க; முத்தரசன்


அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஜூலை 18) அவர் வெளியிட்ட அறிக்கை:

"அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5,000 தொகுப்பூதியம் பெற்று வந்த இவர்கள் தற்போது 7,700 மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகின்றனர்.

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு இனி வரும் நாட்களில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். இதுவரை அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை

கரோனா நோய் பெருந்தொற்று காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது மாதங்கள் ஊதிய பாக்கியை வழங்காமல் இருப்பது வேதனையானது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

முதல்வர் அளித்த உறுதிமொழியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பும் ஏட்டில் எழுதப்பட்ட சர்க்கரையாகவே நீடிக்கிறது.

இனியும் தாமதிக்காமல் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதுடன் கரோனா கால நெருக்கடிகளைச் சமாளிக்க ஒரு மாத ஊதியம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment