Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

தகவல்தொழில்நுட்பம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழிப் பயிற்சி


சங்ககிரி: கரோனா தொற்று பாதுகாப்பு பொது முடக்கத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரசு பள்ளிகளில் இருக்கும் சாதனங்களை பயன்படுத்தி தாள்களை பயன்படுத்தாமல் மாணவ, மாணவிகளுக்கு கற்பிப்பது மற்றும் மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்களை தொடர்ந்து கவனம் சிதறாமல் படிக்க வைப்பது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களால் தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய, மாநில விருதுகள் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு இணையவழிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அரசு பள்ளி ஆசிரியர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளன.

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. அதனையடுத்து பள்ளிகள் திறக்கப்படாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு வகைகளில் அவரவர்கள் பாடங்களை படித்து வருகின்றனர்.


இந்நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளை தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கொண்டு வரவேண்டும் என்று எண்ணிய அரசு பள்ளி ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு டிஜிட்டல் டீம் என்ற குழுவினை உருவாக்கியுள்ளனர். அக்குழு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவாகவும், எளிமையான வகையில் புரியும் வண்ணம் தகவல் தொழில்நுட்ப துறையில் நிபுணத்துவம் வாய்தவர்களும், இத்துறையில் தேசிய, மாநில விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவது என முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து செங்கல்பட்டைச் சேர்ந்த ப.இரமேஷ், விருதுநகர் பி.கருணைதாஸ், விழுப்புரம் எஸ்.திலீப், கரூர் எஸ்.மனோகர், காஞ்சிபுரம் ஜி.செல்வகுமார், சேலம் ஆர்.இளவரசன், கே.அய்யப்பன், சேலம் மாவட்டம், சங்ககிரி எம்.ஆறுமுகம், திருப்பத்தூர் ஆ.அருண்குமார், சி.சரவணன் உள்ளிட்டோர் ஜூலை 18 -ஆம் தேதி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை தினசரி காலை, மாலை ஒரு மணி நேரம் என இரு பிரிவுகளாக பிரித்து இணைய வழி மூலம் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 2500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர்களின் செல்லிடபேசிகளை கொண்டு பள்ளியில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி, டிவிடி மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்தல் குறித்து பல்வேறு வகைகளில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் திறன் பேசி (ஸ்மார்ட் போன்), கணினி, மடிக்கணினி உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மேலும் பயிற்சி அளிப்பது குறித்தும், மாணவ, மாணவிகள் எழுதி வினாக்களை கணினியில் மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவைகளை விரிவாக கூறினர்.

பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மாநில அளவில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இணையவழியில் பயிற்சி அளித்தது சமூக ஆர்வலர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களை பாராட்டியுள்ளனர். அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெற்று வரும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக மாநிலம் முழுவதும் உள்ள ரோட்டரி, இன்னர்வீல், அரிமா உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து இணையவழிப்பயிற்சிக்கு தேவையான தரமான கருவிகளை அமைத்து கொடுத்தால் வரும் காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு தரமான இணைய வழிக்கல்வி அளிக்க முடியும் என்பது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளன.





தமிழ்நாடு டிஜிட்டல் டீம் இணையவழிப்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செங்கல்பட்டு ப.இரமேஷ் இது குறித்து கூறியது:-

அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டுமென எண்ணி இக்குழுவினை உருவாக்கி தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களைக் தொடர்பு கொண்டு அவர்களது உதவியுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சிகளை ஏப்ரல் மாதத்தில் தொடங்கினோம் அதனையடுத்து மே மாதத்திற்கு பிறகு ஜூலையில் அளித்து வருகிறோம். தொடர்ந்து இப்பயிற்சிகளை அளித்து வருவதை அறிந்து மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் ஆர்வத்துடன் முன் வந்து இணையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார்.

மேலும் அவர் அடுத்த கட்டமாக ஒவ்வொரு பள்ளியிலும் வகுப்புக்கள் வாரியாக கட்செவி அஞ்சல் குழுக்கள் தொடங்கி அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு பாடங்களை நடத்துவது குறித்து இணையவழி பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளன என்றார்.

இணைய வழி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற சேலம் மாவட்டம், சங்ககிரி ஊரட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சி.கண்ணன் கூறியது:

தகவல் தொழில்நுட்பம் குறித்து இணைய வழிப்பயிற்சி மிகுந்த பயன் உள்ளதாக இருந்தன. இணைய வழி மூலம் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கங்களுடன் பாடங்களை நடத்துவதன் மூலம் தாள்கள் (பேப்பர்) தேவையில்லாமல் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம் தாள்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களும், மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment