Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 12, 2020

அரசு பள்ளிகளில் 17 முதல் மாணவர் சேர்க்கை


சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும், 17ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவங்கப்பட உள்ளது. இதற்காக, வகுப்பு வாரியாக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ''பள்ளிகள் திறப்பு குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், புதிய மாணவர் சேர்க்கை எப்போது துவங்கும் என, மாணவர்களும், பெற்றோரும், பள்ளிகளும் எதிர்பார்த்திருந்தன. வருமுன் காப்போம்:இதற்கான அறிவிப்பை, பள்ளிக் கல்வித் துறை, நேற்று வெளிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: கொரோனா தொற்றை, மத்திய அரசு பேரிடராக அறிவித்துள்ள நிலையில், வருமுன் காப்போம் என்ற, முதுமொழிக்கு ஏற்ப, தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வகை பள்ளிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் மாணவ - மாணவியர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதாவது, ஒன்று, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு, வரும், 17ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக, பிற வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கும், வரும், 17 முதல், சேர்க்கை நடத்தப்படும். அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, வரும், 24ம் தேதி முதல் துவங்கும். மாணவர் சேர்க்கை நடக்கும் நாளிலேயே, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உரிய பாதுகாப்புடன், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.உயர்மட்ட குழு:இதற்கிடையில், ''மாணவர் சேர்க்கை துவங்கினாலும், பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள், தற்போது இல்லை,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், கொரோனா தாக்கம் இன்னும் தணியவில்லை.

எனவே, தற்போது பள்ளி களை திறக்க இயலவில்லை. பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.முதல்வர் தலைமையிலான நிபுணர் குழுவினர் முடிவு செய்து அறிவிக்கும் வரை, பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.வாய்ப்பு இல்லை:தமிழகத்தில் வரும், 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என, அமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்து விட்டார். அதனால், அடுத்த மாதமும், பள்ளி திறப்புக்கு வாய்ப்பு இல்லை என, தெரிகிறது. 'டிசம்பர் வரையில், பள்ளிகளை திறப்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படாது' என, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், நேற்று தெரிவித்துள்ளது.இலவச 'அட்மிஷன்'இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் நடத்தப்படும். இதன்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், இலவச சேர்க்கைக்காக ஒதுக்கப்படும். இந்த ஆண்டுக்கான சேர்க்கையை, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இலவச சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பதிவு குறித்து, மெட்ரிக் இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment