Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

மாணவர்களுக்கு இலவச பான் கார்டு: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை


போடியில் மாணவர்களுக்கு இலவசமாக வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்த பள்ளி நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சிறப்பு தேர்வுகளுக்கான ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது. இந்த உதவி தொகைகளை வங்கி கணக்கின் மூலமே பெற முடியும். இதற்காக மாணவர்கள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பெரும்பாலான வங்கிகள் அடையாள சான்றுடன் வருமான வரி நிரந்த கணக்கு எண் (பான் கார்டு) அவசியம் என கூறுகின்றனர். வருமான வரி நிரந்தர கணக்கு எண் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கல்விக் கடன் பெறுவதற்கும் வங்கிகளில் நிரந்தர கணக்கு எண் கேட்கப்படுகிறது.

இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க போடியில் செயல்பட்டு வரும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நிரந்தர வருமான வரி கணக்கு எண் பெற்று கொடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ரா.ஜெயக்குமார் கூறியது: மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்கும், எதிர்கால தேவைக்கும் கருதி பள்ளி நிர்வாகம் சார்பில் வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்று கொடுத்துள்ளோம். இதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே செலுத்தியுள்ளது.

முதல் கட்டமாக பள்ளியில் பயிலும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த 10 வயதுக்கு கீழ் உள்ள 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதற்கான பான் அட்டை அஞ்சல்துறை மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே கிடைத்துள்ளது. மேலும் வருமான வரி நிரந்த கணக்கு எண் என்றால் எண்ண, நிரந்தர கணக்கு எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள 10 இலக்கங்கள் கொண்ட எழுத்து மற்றும் எண்கள் எதனை குறிப்பிடுகிறது. நிரந்த கணக்கு எண்ணை எப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.

பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் கல்வி, செல்லிடபேசி தேர்வுகள், அறிவியல், கணித சிறப்பு தேர்வுகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களையும் அதிக அளவில் பங்கேற்க செய்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment