Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 7, 2021

'18ம் தேதி முதல் பள்ளியை திறக்கலாம்!'

'திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 60 சதவீத பெற்றோர், தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கலாம்,' என விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், அக்., மாதம் முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 

ஜன., முதல் பீகார், அசாம், கேரளா உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா ராஜஸ்தான் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.தமிழகத்தில் இதுவரை இழுபறியாக இருந்தநிலையில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொங்கல் முடிந்து பள்ளிகள் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று முதல் துவங்கியது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'கருத்து கேட்க, 8ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், சமூக இடைவெளி கருதி, வகுப்பு வாரியாக மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரைவழைக்கிறோம். காலை, மதியம் என இரு பிரிவுகளாக கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது. முதல்நாளில், 60 சதவீதம் பெற்றோர் பள்ளிகள் திறக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதர பெற்றோர் அடுத்த கல்வியாண்டிலும், தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்' என்றனர். குழப்பம் நீடிப்பு : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வீட்டில் இருந்தவாறே தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு, 35 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தெந்த பகுதிகள் என இதுவரை அறிவிக்காததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

'தை' பிறந்தாலாவது, வழி பிறக்குமா? என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.நேரில் வராத பெற்றோர்!கருத்து கேட்பில் பங்கேற்க, வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்து வருகின்றனர். 

முதல் நாளான நேற்று, 20 சதவீத பெற்றோர்களே கருத்து கேட்பு கூட்டத்திற்கு நேரில் வந்தனர். ஏனைய பெற்றோர், 'பள்ளிக்கு நேரடியாக வந்தால், ஒரு நாள் கூலியே போய்விடும்' என கூறி, தொலைபேசி மூலமாகவே தங்கள் கருத்தை தெரிவித்து வருவகின்றனர். இவர்களின் கருத்துக்களும் பதிவேற்றப்படுவதாக கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment