Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 20, 2021

புதிய பாடப்பிரிவுகள் துவங்கியும் பேராசிரியர் நியமனம் இல்லை! 3,000 பணியிடங்கள் காலி

கல்லுாரிகளில், 10 ஆண்டுகளில், 1,200 பாடப்பிரிவுகள் புதிதாக துவங்கப்பட்ட நிலையில், அதற்கான பேராசிரியர்கள் பணிநியமனம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது.

தமிழகத்தில், 149 அரசு கல்லுாரிகள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும், ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சி, அப்பகுதி மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஆய்வு செய்யப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் துவக்க கல்லுாரிகளுக்கு அனுமதியளிக்கப்படும். கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், 1200 புதிய பாடப்பிரிவுகள் அரசு கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் புதிதாக, 60க்கும் மேற்பட்ட அரசு கலை, கல்வியியல் கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், பணிநியமனங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. புதிதாக செயல்படும் பல பாடப்பிரிவுகளில், ஒரு பேராசிரியர் கூட இல்லாத நிலை உள்ளது.உதாரணமாக, பழமைவாய்ந்த கோவை அரசு கலை கல்லுாரியில், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட விலங்கியல், பாதுகாப்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு நிரந்தர பேராசிரியர் கூட இல்லை. வரலாற்று பேராசிரியருக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பியல் துறை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், இதே நிலை தொடர்கிறது.அரசு கல்லுாரி முதல்வர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அரசு கல்லுாரிகளில், கடந்த பத்தாண்டுகளாக ஒரு பணிநியமனம் கூட மேற்கொள்ளப்படவில்லை. தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில், 3,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. தவிர, 41 பல்கலை உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன. அதற்கும் ஆசிரியர் நியமிக்கவில்லை. புதிய கல்லுாரிகளில் தோற்று விக்கப்படாத பணியிடங்களே பல உள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள, தமிழக முதல்வர், அரசு கல்லுாரிகளில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment