Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

கரோனா சிகிச்சை பணியில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 4,690 மருத்துவர்கள் நியமனம்

எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 4,690 மருத்துவர்கள், கரோனா சிகிச்சைக்காக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் 4,700-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாண்டு தேர்வுகளை எழுதினர். வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாக இரண்டரை மாதங்களாகும். ஆனால், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

இதையடுத்து, புதிதாக 4,690மருத்துவர்கள் கரோனா சிகிச்சைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் சுதாசேஷய்யன் கூறியதாவது: எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடப்பாண்டில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

பொதுவாக விடைத்தாள் மதிப்பீடு, பல்கலைக்கழகத்தில்தான் நடைபெறும். ஆனால் இம்முறை தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, மெய்நிகர் (விர்ச்சுவல்) முறையில் அப்பணிகள் நடைபெற்றன.

அதன்படி, பேராசிரியர்கள் தங்களது இடத்திலிருந்தவாறே விடைத்தாள்களை மதிப்பீடு செய்தனர். பல்கலைக்கழக இணைய தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் ஒருங்கிணைத்து, கணினி வாயிலாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்றன.

அதில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்களை, அவர்களது கணினி கேமரா மூலமாகவே பல்கலைக்கழக நிர்வாகிகள் கண்காணித்தனர். ஒருவேளை கேமரா நிறுத்தப்பட்டால், உடனடியாக விடைத்தாள் திருத்தத்துக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு பகல் பாராமல் தொடர்ந்து அப்பணிகளில் அனைவரும் ஈடுபட்டதால், இரு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன் மூலம் 4,690 மருத்துவர்களை கரோனா சிகிச்சைகளில் விரைந்து ஈடுபடுத்த வழிவகை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment