Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 14, 2021

இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு வரை அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுப் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு கரோனா பரவல் தீவிரத்தால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் துரிதமாக முடித்து, பாடங்களை இணைய வழியில் நடத்தப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் கட்டமாக பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஜூன் 14) தொடங்கியுள்ளது.

சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 12 மணிக்கு மாணவர் சேர்க்கை நடைமுறையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''மாநிலத்தில் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று நடைபெறவில்லை. தகுந்த தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஒரு வார காலத்துக்குள் முடிவடைந்துவிடும். முடிந்ததும் பாடப் புத்தக விநியோகம் விரைவில் தொடங்கும். அதை முதல்வர் தொடங்கி வைப்பார்.

அனைத்து மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கும் பாடப்புத்தகங்கள் சென்று சேர்ந்துவிட்டன. மாணவர் சேர்க்கை நடந்து முடியும்போது பாடப் புத்தகங்களையும் விநியோகிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒன்பதாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதனால் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை என்ற நடைமுறையில் பெரிதாகப் பிரச்சினை எழவில்லை.

நிறைய மாணவர்கள் தற்போது அரசுப் பள்ளிகளை நோக்கி வருகின்றனர். அதனால் அவர்கள் அனைவரையும் தற்போது நேரடியாக ஒரே வகுப்பில் உட்கார வைப்பது சாத்தியமில்லை. இதுகுறித்து அரசு இதுவரை யோசிக்கவில்லை.

தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வாட்ஸ் அப் மூலம் வீட்டுப் பாடங்களைக் கொடுத்து வருகிறோம். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள மாணவர்களுடன் இணைந்து படித்து வருகின்றனர்.

பள்ளிகளைத் தற்போது திறந்து பாடங்களை நடத்துவது குறித்து எதுவும் யோசிக்கவில்லை. இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment