Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 13, 2021

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஒரே கட் ஆஃப் மதிப்பெண் வந்தாலும் வழிகாட்டு முறைப்படி சேர்க்கை - புதுவை அரசு

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. வரும் 14-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. ஒரே கட் ஆஃப் மதிப்பெண் இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைப்படி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சேர்க்கையில் முடிவு எடுப்பர்.

புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 4 ஆயிரத்து 45, கலைப்பிரிவில் 2 ஆயிரத்து 305 இடங்கள் உள்ளன. தொழில் பாடப்பிரிவில் 565 இடங்கள் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 915 இடங்கள் உள்ளன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கடந்த 5-ம் தேதி வரை பெறப்பட்டன. பள்ளிகளில் சேர 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

கரோனா கால ஊரடங்கால் பலரும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுவதும் இதற்கு முக்கியக் காரணம். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை தரவரிசைப் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் இன்று மாலை வெளியிடப்பட்டது. வரும் 14-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

ஒரே கட் ஆஃப் வந்தால்?

10-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வை நடத்தாததால் பல மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணுடன் விண்ணப்பித்துள்ளனர். பல மாணவர்கள் 5 பாடங்களிலும் குறைந்தபட்சத் தேர்ச்சி பெற்று 500-க்கு 175 பெற்றுள்ளனர். சில பள்ளிகளில் 200 மாணவர்கள் வரை இந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர். சம மதிப்பெண்களுடன் உள்ளதால் எந்த அடிப்படையில் மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சிலர் தெரிவித்திருந்தனர்.

இதுபற்றி அரசுப் பள்ளிகள் தரப்பில் விசாரித்தபோது, "ஏற்கெனவே ஒரே கட் ஆஃப் இருந்தால் பிறந்த தேதி தொடங்கி சேர்க்கைக்குப் பல வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதன்படி பள்ளித் தலைமையாசிரியர் சேர்க்கையை நடத்துவார்" என்று குறிப்பிட்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை முடிந்து 19-ம் தேதி காலியிட விவரம் வெளியிடப்படும். அன்றே அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. இவர்களுக்கு 21-ம் தேதி சேர்க்கை நடைபெறும். 22-ம் தேதி காலியிட விவரம் வெளியிடப்படும். அன்றைய தினம் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 23-ம் தேதி சேர்க்கையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment