Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 20, 2021

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம்.

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து, அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ்-2 தேர்வு மே மாதம் நடக்கும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால் கரோனா பரவல் 2வது அலையால் மேல்நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பும் வெளியானது.

இதைத்தொடர்ந்து பிளஸ்-2 நேரடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிறப்பு வழிகாட்டு குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவின் அறிக்கைபடி, 10, 11 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஜூலை 30 ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்த்த நிலையில், நீட் தேர்வு, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே இன்று பிளஸ்-2 தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

ஆன்லைன் மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், அரசுக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் வரும் 26 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என, உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர திட்டமிட்டு இருந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் இன்று வெளியான பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் விரும்பிய கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

ஏற்கெனவே ஒருசில அரசு உதவி பெறும் கல்லூரிகள், மதிப்பெண் இன்றி, பெயர், முகவரி, விரும்பிய பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பங்களை சேகரித்தாலும், இன்று வெளியான மதிப்பெண் விவரத்தின் படி, மீண்டும் விண்ணப்பங்களை பதிவிறக்கும் செய்து, பதிவிட அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களுடன் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்புகின்றனர். ஒருசில அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நேற்று முதலே ஆன்லைனில் விண்ணப்பிக்க தங்களது கல்லூரிக்கான இணைய முகவரியை அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், அரசுக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பங்களை சேகரிக்கும் பணியை ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதற்காக மாணவர்களும் காத்திருக்கின்றனர்.

அரசுக் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில், ‘‘ நடப்பு கல்வியாண்டுக்கு பெரும்பாலான தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து, ஆன்லைனில் பாடமெடுக்கவே தொடங்கி விட்டனர். அரசுக் கல்லூரிகளில் இன்னும் முதுநிலை வகுப்புக்கான சேர்க்கை தொடங்கவில்லை. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முதுநிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், இளநிலை வகுப்புகளுக்கும் சேர்க்கை பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

எதுவானாலும் உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படியே, அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இளநிலை வகுப்புகளுக்கு எந்த இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்,’’ என்றார்.

No comments:

Post a Comment