Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 5, 2021

கல்வித் தொலைக்காட்சி வழிக் கற்றல்; சந்தேகங்களை செல்போன் மூலம் தீர்க்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, செல்போன் வாயிலாக ஆசிரியர்கள் போக்க வேண்டும் என்று புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, புதிய மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் வருகை, புதியதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS) பதிவேற்றம் செய்தல், மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கல் உள்ளிட்ட விவரங்களை, பதிவேடுகளை வாங்கிப் பார்த்து ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளி வளாகத் தூய்மை, கழிவறைத் தூய்மை ஆகியவற்றையும் பார்வையிட்டு அவர் கூறும்போது, ''பள்ளி முழுவதையும் சுகாதாரமான முறையில் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். குறிப்பாகக் கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, செல்போன் வாயிலாக ஆசிரியர்கள் போக்க வேண்டும்'' என்று முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தெரிவித்தார்.

ஆய்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

கரோனா பரவலால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர் சேர்க்கை, வளாகப் பராமரிப்பு போன்ற பணிகளை கவனிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக நடைபெறுகின்றனவா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment