Tuesday, August 31, 2021

பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டன. இதனிடையே தொற்றுப் பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப். 1-ம் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுப் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

இதையொட்டிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், '9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 3.30 மணிவரை வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தாலோ அல்லது கிழிந்த முகக்கவசத்தை அணிந்திருந்தாலோ பள்ளியில் முகக்கவசம் தரப்படும். வகுப்பறை மேஜையில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் மற்றொரு மாணவரும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் சானிடைசர்கள் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மாணவர்களைக் கட்டாயமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. எனினும் பெற்றோர்கள் அக்கறையுடன் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை.

பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இந்தச் சூழலை எதிர்கொள்ள மாணவர்களை முதலில் மனதளவில் ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டும்' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.