தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல்வேறு பாடங்களை எடுப்பதற்காக பகுதி நேரமாக பணியமர்த்தப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, அறிவியல், இசை, தையல் ,தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி, ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களும் கற்று கொடுக்கப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இதற்காக 16ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பகுதிநேரமாக பணிபுரிய நியமிக்கப்பட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளமும் வழங்கப்படுவதில்லை. குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல், பலர் வறுமையில் வாடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநிரந்தரம் ஆகாமலே பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். பலர் ஓய்வு பெறும் நிலையிலும் உள்ளனர். இவர்களுக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய போனஸ் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
பணியிட மாறுதல், மகப்பேறு விடுப்பு, இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் போன்றவை கிடைப்பதில்லை. இவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 13ந் தேதி தாக்கல் செய்துள்ளனர்.பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் ஆகஸ்ட் 27ந் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பணி நிரந்தரம் அறிவிக்கப்படுமா என எதிர்பார்த்து வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது, திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது.
ஆனால் பணி நிரந்தரம் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள், ஊர்புற நூலகர்கள், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர்கள் மட்டுமே இடம்பெற்றது.எனவே சொன்னதை செய்வோம் என்ற திமுகவை நம்பி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
இது எங்களின் 10 ஆண்டுகால கோரிக்கை ஆகும்.பணிநிரந்தரம் கேட்டு 12ஆயிரம் குடும்பங்கள் சார்பில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.



No comments:
Post a Comment