Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 10, 2022

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ல் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்


தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள் கலந்து கொள்வதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனுப்பியுள்ளசுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (எஸ்எஸ்ஏ) கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ம் தேதிகாலை 10 மணி முதல் பகல்1 மணி வரை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

52 லட்சம் பெற்றோர் பங்கேற்பு

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக அமைக்கப்படும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், அதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 20-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் ஏறத்தாழ 52 லட்சம் பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றில் இது முக்கியநிகழ்வு ஆகும். அரசுப் பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment