Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 16, 2022

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

சென்னையில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமைகளைக் குறைக்கும் விதமாகவும், 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை என்பதாலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இந்த கருத்தை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியார்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடங்களை முறையாக நடத்தாததால் தான் அதற்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு 11ம் வகுப்பு பாடத்திட்டங்கள் முக்கியமானது. எனவே, 11ம் வகுப்பில் பொதுத்தேர்வு என்னும் நடைமுறை தொடரும். அதில் குழப்பம் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், மாநில அரசு அலுவலர்களுக்கு, அகவிலைப்படி விகிதம் 34% அளவு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், " தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment