அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சொந்த செலவில் நீட் பயிற்சிக்கு அனுப்பிய கிராம மக்கள்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 15, 2022

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சொந்த செலவில் நீட் பயிற்சிக்கு அனுப்பிய கிராம மக்கள்!

நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகவே உள்ளது.

எனினும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட 7.5% உள் இட ஒதுக்கீடு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 300 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அதிலும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மட்டும் 11 மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சிவா படித்த சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து மற்றொரு மாணவரும் மருத்துவம் படிக்க சென்றுள்ள நிலையில், இந்த ஆண்டு 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நீட் தேர்வு பயிற்சிக்கு செல்ல வசதியில்லாத 8 மாணவிகள், ஒரு மாணவன் உள்பட 9 மாணவ, மாணவிகளை நீட் பயிற்சிக்கு அனுப்ப பள்ளி நிர்வாகம் முடிவெடுத்த நிலையில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பொதுமக்களின் பங்களிப்போடு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டு பயிற்சி கட்டணத்தை செலுத்தவும் முன்வந்தனர். விடுதிக்கான செலவை பெற்றோர்கள் ஏற்றனர்.

பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு நீட் பயிற்சி மையத்திற்கு 9 மாணவ, மாணவிகளை அவர்களின் பெற்றோருடன் வேனில் அனுப்பி வைத்த நிர்வாகிகள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் படித்து தேர்ச்சிப் பெற்று கிராமத்திற்கு நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலட்டூர் போல பல கிராமங்களிலும் ஏழை மாணவர்கள் படிப்பிற்காக உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை மாணவர்கள் கல்வியில் மேம்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இன்று சிலட்டூரில் ஏற்பட்ட கல்வி புரட்சி அடுத்து பல கிராமங்களிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad