JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகம் முழுவதும் 28 அரசுப்பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த மாதம் 5ம் தேதி தமிழகம் வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.170 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தகைசால் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், அதிநவீன கம்ப்யூட்டர்கள், அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும்.
இதன் மூலம் சர்வதேச தரத்தினாலான பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஈடாக அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் உருவாகும் நிலை ஏற்படும்.
அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் கற்றுத் தருவது மட்டுமின்றி இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகைசால் பள்ளிகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 28 அரசுப்பள்ளிகளில் பெரும்பாலானவை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால் பள்ளிகளுக்காக தோந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இப்பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுள்ள கம்ப்யூட்டர்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தவுள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த வகை பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் 62,460 மாணவர்கள் பயனடைவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment