Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 10, 2022

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இனி 'நீட்' தேர்வு கிடையாது!

மருத்துவ மாணவர்களுக்காக 'நெக்ஸ்ட்' எனப்படும் தகுதி தேர்வு அறிமுகமாவதால், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு அடுத்தாண்டு முதல் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் சேருவோருக்காக, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இது, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, 'நெக்ஸ்ட்' எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்த, தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை இருக்கும். மேலும், இளநிலை மருத்துவப் படிப்பை முடிப்போர், மருத்துவப் பணியாற்றுவதற்கான தகுதித் தேர்வாகவும் இது இருக்கும். இதைத் தவிர வெளிநாடுகளில் மருத்துவம் படிப்போருக்காக நடத்தப்படும் வெளிநாட்டு மாணவர் தகுதித் தேர்வுக்கு மாற்றாகவும், நெக்ஸ்ட் தேர்வு இருக்கும்.

இந்த நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை, 2023 டிசம்பரில் நடத்த, தேசிய மருத்துவ கமிஷனின் சமீபத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 - 2025 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, 2023 டிசம்பரில் நடக்கும் நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனுமதிக்கப்படுவர்.

இதையடுத்து, 2023 ஏப்ரல், மே மாதத்தில் நடக்கும் நீட் தேர்வு தான், முதுநிலை மாணவர் சேர்க்கைக்காக கடைசி நுழைவுத் தேர்வாக இருக்கும். நெக்ஸ்ட் தேர்வு தொடர்பான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் வாயிலாக நடத்தாமல், புதுடில்லி எய்ம்ஸ் வாயிலாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment