JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் 'தமிழகத்தில் கடந்த 15ஆண்டுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நலன் கருதி உடற்கல்வி,ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 16ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்கள்.
பாடத்திட்டத்தோடு, கல்வி இணை செயல்பாடும் தேவை என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டு, 12ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு 2012ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு, அடுத்து 2017ம் ஆண்டு 700, கடைசியாக 2021ம் ஆண்டு ரூ. 2300 என உயர்த்தி ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். இப்போது அலுவலகத்தில் பணிபுரிகிற ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே திட்டத்தில் வேலை செய்து வருகின்ற 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் 19 மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை. சம்பளத்தையும் உயர்த்தவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் இந்த ஊதிய உயர்வை, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான இந்த கோரிக்கையைத் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment