Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Wednesday, March 1, 2023

பள்ளி மாணவர்களின் காலைச் சிற்றுண்டி விரிவாக்கம் உள்பட 7 திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

Add This Number In Your Whatsapp Groups -6379884356





தமிழகத்தில் மேலும் 433 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம், 44 இடங்களில் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல், திருநங்கைகளுக்கு உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு உள்ளிட்ட ஏற்றமிகு 7 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், தமிழகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைதார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு, திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது திமுக ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றத்தை நாங்கள் உருவாக்கி தருவோம் என்று கூறினோம். அப்போது பத்தாண்டுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே திட்டமிட்டு சொன்னேன்.

1. வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு.

2. மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி.

3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்.

4. அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்.

5. அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு.

6. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்.

7. உயர்தர ஊரக கட்டமைப்பு- உயர்ந்த வாழ்க்கைத்தரம். இவை தான் அந்த உறுதிமொழிகள்.

‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்று அவை திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புர வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய ஏழு இலக்குகளோடு எங்களது பயணம் அமையும் என்று குறிப்பிட்டேன். அந்த இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். தேர்தலில் வென்றோம். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவுடன் கோட்டைக்கு சென்று நான் கையெழுத்து இட்ட முதல் கோப்பு மகளிருக்கு பேருந்து கட்டணம் ரத்து. இதுநாள் வரையில், ரூ.236 கோடி பயணத்தை பெண்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலமாக, பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள்.

சமூக பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இன்றைய தினம் நமது ஆட்சிக்கு மிகப்பெரிய பேரும் புகழும் வாங்கி தரும் திட்டமாக இது அமைந்திருக்கிறது. அடுத்து கையெழுத்து ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்து அதையும் மகளிருக்காக ஏற்படுத்தி தந்தோம். அதற்கு அடுத்த கையெழுத்து, கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால், ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அன்றைக்கு நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. நான் முதமைச்சராக பொறுப்பேற்றவுடன் 4000 ரூபாய் வழங்க இரண்டாவது கையெழுத்து போட்டேன். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக அது அமைந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஏழு முக்கியமான திட்டங்களை இன்றைக்கு நான் தொடங்கி வைக்கிறேன். நாளை (இன்று) மார்ச் 1, என்னுடைய 70வது பிறந்தநாள். இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமை காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன். ‘அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?’ என்று கேட்டபோது, ‘அரசியலில்தான் நிச்சயம் நான் இருந்திருப்பேன்’ என்று பதில் சொன்னவன் நான்.

அரசியல் என்பதை அதிகாரம் என்பதாக இல்லாமல், அதனை கடமையாகவும் தொண்டாகவும் சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும், தலைவர் கலைஞரும், பேராசிரியரும்தான். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதுதான் பொதுவான இலக்கு. அதனால்தான் மக்கள் பயன்பெறக்கூடிய எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து துவக்கி வைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் ‘தினந்தோறும் திட்டங்கள்’ என்பதுதான் என் திட்டம். அதாவது, தினந்தோறும் திட்டங்களை தீட்டுவதுதான் என்னுடைய பணி. அந்த வகையில், இந்த விழாவில் மிக முக்கியமான ஏழு திட்டங்களை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

* முதல் திட்டம்...

மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க D.I.C.C.I அமைப்புடன் ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆகியிருக்கிறது. சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலமாக சென்னை மாநகர பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

* இரண்டாவது திட்டம்...

சத்து குறைபாடு அடைந்திருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய ஒரு திட்டம். ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு சிகிச்சை, உணவு தரப்படும். தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை என்பதை, 3 முட்டையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிஸ்கெட்டும் வழங்கப்படுகிறது. அந்த குழந்தைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவார்கள்.

* மூன்றாவது திட்டம்..

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க இருக்கிறோம்.

* நான்காவது திட்டம்..

திருநங்கைகளுக்கு மாதம்தோறும் வழங்கக்கூடிய உதவித்தொகை தொகை ரூ.1000த்தில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.

* ஐந்தாவது திட்டமாக, பல்வேறு துறைகளில் உள்ள அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பணி ஆணை வழங்கப்படுகிறது.

* ஆறாவது திட்டமாக,

இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருக்கக்கூடிய முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் கடந்த செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்தநாளில் மதுரையில் வைத்துதான் நான் துவக்கி வைத்தேன்.

தற்போது, 15 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகள் உள்ளடக்கிய 38 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைந்துள்ள 539 பள்ளிகளில் பயிலும் 50 ஆயிரத்து 306 மாணவர்கள் இப்போது இந்த திட்டத்தின்கீழ் காலை உணவு உண்டு வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

எனவே இதனை விரிவுபடுத்துவதற்காக திட்டமிட்டு, அடுத்த கட்டமாக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு இன்று முதல் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாக பயனடைவார்கள். இதன்படி, இன்று முதல் காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவ செல்வங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 404 ஆகும்.

* ஏழாவது திட்டமாக,

ரூ.1,136.32 கோடி மதிப்பீட்டில் 44 இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. இந்த திட்டங்களை துறையினுடைய அமைச்சர்கள், துறையினுடைய செயலாளர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களை வரை இதனுடைய நோக்கம் சிதைந்துவிடாமல் நிறைவேற்றி காட்ட வேண்டும். கோட்டையில் இருந்து நிறைவேற்றும் திட்டமானது, கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்பிக்கள் வைகோ, கனிமொழி சோமு, கிரிராஜன், எம்எல்ஏக்கள் டி.ஆர்.பி.ராஜா, ஆர்.மூர்த்தி, செல்வப்பெருந்தகை, பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில் குமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்த குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* தாழ்ந்த தமிழ்நாடு அல்ல; இது ஏற்றமிகு தமிழ்நாடு

ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். இதுவரையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். ரூ.2563 கோடி மதிப்பிலான ஊரக குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.18,815 கோடி மதிப்பீட்டில் 446 குடிநீர் திட்டப் பணிகளும், ரூ.4499 கோடி மதிப்பீட்டில் 23 பாதாள சாக்கடை திட்டங்களும் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.49,385 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

எனது லட்சியம் என்பது, வளமான தமிழ்நாடு! வலிமையான தமிழ்நாடு! வறுமை ஒழிந்த தமிழ்நாடு! சமத்துவ தமிழ்நாடு! சுயமரியாதை தமிழ்நாடு! மாநிலம் என்பது எல்லைகளால் உருவானது அல்ல, எண்ணங்களால் கருவாகி உருவானது. எனவே தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும். எங்களை உருவாக்கிய தமிழ்நாட்டின் உயர்வுக்காக பணியாற்றி வருகிறோம். ‘‘ஏ! தாழ்ந்த தமிழகமே!” என்று அண்ணா அவர் காலத்தில் சொன்னார். அந்த நிலைமையை மாற்றி, ‘‘எனது ஏற்றமிகு தமிழ்நாடே!” என்று ஒவ்வொருவரும் பெருமையோடு அழைக்கும் நிலையை உருவாக்க நமது திராவிட ஆட்சியில் அனைவரும் எந்நாளும் உழைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.





No comments:

Post a Comment

Popular Feed