Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 20, 2025

மாயா பஜாரில் மாணவி கடிதம்: பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் - அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆவுடையார்கோவில் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடிதம் வாயிலாக மாணவி விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள குருங்களூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.ஞானதர்ஷினி, ‘இந்து தமிழ்’ நாளிதழில் மாயாபஜார் பகுதி வாயிலாக தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் நேற்று பிரசுரமானது. அதில், மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எம்.அருணாவுக்கு உத்தரவிட்டார். மேலும், இதை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டு இருந்தார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.உஷா ராணி கூறியதாவது: இப்பள்ளியில் 102 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கண்மாய் கரையோரமாக உள்ள இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மழைக் காலத்தில் தண்ணீர் பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளால் பராமரிக்கப்பட்டு வரும் பூச்செடிகள், காய்கறி செடிகள், மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்துகின்றன.

அதேபோல, பள்ளியில் செயல்பட்டு வந்த ஹைடெக் ஆய்வகமும் செயல்பாட்டில் இல்லை. இதனால், ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்றும் மாணவி ரா.ஞானதர்ஷினி 'இந்து தமிழ்' நாளிதழுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News