Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 2, 2025

கர்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு! தடுக்க ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்



தமிழக அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்புக்காக, ஹெச்.பி.வி., வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, விரைவில் துவங்கவுள்ளது.

புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய, தமிழக சுகாதாரத்துறையின் கீழ், பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய், வாய், கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய்களுக்கு, ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, முதல்கட்டமாக பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான ஹெச்.பி.வி., தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஏழை குழந்தைகளுக்கு பயன்

தனியார் மருத்துவமனைகளில், 9 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு, இத்தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இதற்கான வசதி ஏற்படுத்தினால் மட்டுமே, ஏழை குழந்தைகள் இதனை பயன்படுத்த இயலும்.

இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக, 36 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்து இருந்தது, தமிழக அரசு. இந்நிலையில், பள்ளிகளில் நேரடியாக செலுத்தலாமா அல்லது அரசு மருத்துவமனைகளில் செலுத்தலாமா, அல்லது போலியோ முகாம் போன்று, பொது இடங்களில் செலுத்தலாமா போன்ற ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான செயல்பாடுகள் இறுதி செய்யப்பட்டதும் , உடனடியாக அமல்படுத்தப்படும். அரசு மருத்துவமனையில் செலுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார்.

தயங்காதீர் பெற்றோரே!

இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது, 100ல் 70 பேருக்கு ஹெச்.பி.வி.,எனும் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது.

இந்த வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதால், இப்புற்றுநோய் எதிர்காலத்தில் வராமல் தடுக்கலாம். தனியார் மருத்துவமனையில், 9 முதல் 45 வயதுள்ள பெண்களுக்கு, இத்தடுப்பூசி செலுத்துகிறோம்.

பெற்றோர் தயங்காமல், பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அரசு தரப்பில் விரைவில், இத்தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக பெண் குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது என்றார்.

செலுத்துவது நல்லது

எச்.பி.வி., தடுப்பூசி பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு முன்னதாக செலுத்துவது நல்லது. அதாவது 9 வயதிலிருந்து 14 வயதிற்குள் செலுத்திக்கொள்ளலாம். விரும்பினால் 40 வயது பெண்மணிகளும் செலுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த மருந்தினால் சிறு வயதில் கிடைக்கும் பலன், பெரியவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும். எச்.பி.வி., தடுப்பூசி செலுத்த, தனியார் மருத்துவமனைகளில் 4,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது

No comments:

Post a Comment