Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 19, 2025

TET - ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மீண்டும் உறுதி



டெட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம்; இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அறம், சுற்றுச்சூழல் மற்றும் உரிமையை ஒன்றிணைக்கும் விதமாக, ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 'தூய்மை இயக்கம் 2.0' திட்ட தொடக்க விழாவும், அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பும் முக்கிய அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளை துவக்கி வைத்தனர். கழிவுகள் சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்துடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் தூய்மை குறித்து உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளி வகுப்பறைகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கல்வித் தரம் மேம்பாடு தொடர்பாக அவர் பள்ளி நிர்வாகத்துடன் உரையாடியதோடு, மாணவர்களின் திறன்களையும் ஆர்வத்தையும் நேரில் பாராட்டினார்.

இந்த விழாவில், பூட்டுத்தாக்கு ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முழு பயணமும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மாணவர்களுக்கு சமூக நலத்துணிவு ஏற்படுத்துவது மற்றும் கல்வி துறையில் அரசின் உறுதியை வெளிக்கொணர்வது என்பவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸிடம், "TET (Teacher Eligibility Test) தகுதி தேர்வுக் குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பால் ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "TET உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த வழக்கில் வாதாட எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மனுவின் பதிவு பட்டியல் நாளை வெளிவரும். இந்த வழக்கு குறித்த வழிமுறைகளை தெளிவுபடுத்த மகாராஷ்டிரா அரசு கேட்டுள்ளது.

அதைப் போலவே தமிழகமும் சட்டரீதியாக உறுதியாக செயல்படுகிறது. எனவே, இந்த தீ்ர்ப்பு குறித்து ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து ஆசிரியர்களையும் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை மற்றும் பொறுப்பாகும்" என்று அமைச்சர் அன்பின் மகேஸ் உறுதியாக தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த நம்பிக்கை வார்த்தைகள், வேலைநீக்கம் அல்லது தகுதி ரத்து என்ற அச்சத்தில் உள்ள தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment