Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 17, 2025

ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 90 நாட்களே! பதற்றம் வேண்டாம்; வெற்றிக்கான 'ஸ்மார்ட்' பிளான் இதோ!


இன்னும் 3 மாதங்களில் வரவிருக்கும் ஜே.இ.இ. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், பதட்டப்படாமல், புத்திசாலித்தனமான உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றி பெற முடியும். எவ்வளவு படித்தோம் என்பதை விட, எவ்வளவு திறம்பட, தொடர்ச்சியாகப் படித்தோம் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டோம் என்பதே முக்கியம்.

ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 90 நாட்களே! பதற்றம் வேண்டாம்; வெற்றிக்கான 'ஸ்மார்ட்' பிளான் இதோ!

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு (JEE) என்பது பலருக்கு வெறும் தேர்வு அல்ல; இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளுக்குள் நுழையப் போகும் மாணவர்களின் கோல்டன் டிக்கெட்! ஆனால், தேர்வு நெருங்கிவிட்டதே, இன்னும் 3 மாதங்கள்தான் இருக்கிறதே என்று நினைத்து நீங்க பயப்படுவது, பின்தங்கிவிட்டதாக உணர்வது முற்றிலும் இயல்புதான். ஒரு நிமிடம் நில்லுங்கள் உண்மை என்னவென்றால், இப்போதும் தாமதமாகவில்லை நீங்க யதார்த்தமான இலக்கை நிர்ணயித்து, திட்டமிட்டு, புத்திசாலித்தனமாகப் படித்தால் நிச்சயமாக பெரிய பாய்ச்சலை நிகழ்த்த முடியும். அதற்கான 6 ரகசிய வெற்றி உத்திகள் இங்கே பார்க்கலாம்.

1. ஆசிரியர்கள் அல்ல, வழிகாட்டிகளைத் தேடுங்கள்! (Mentor, Not Teacher)

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஜே.இ.இ மாணவரின் பின்னாலும், புத்தகங்களைத் தாண்டிச் சரியான வழிகாட்டுதலை வழங்கிய ஆசிரியர் இருப்பார். அதிக அனுபவமும், தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை உருவாக்கிய அறிவும் கொண்ட ஆசிரியர்களை அல்லது பயிற்சி நிறுவனங்களை கண்டறியுங்கள். இவர்கள் உங்களுக்குத் தனிப்பட்ட கவனம் அளிப்பார்கள்; உங்கள் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பார்கள். குறிப்பாக, இந்த முக்கியமான கடைசி 3 மாதங்களில் உங்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் (Motivation), பொறுப்புணர்வையும் (Accountability) வழங்கி, படிக்கும் சூழலை உறுதி செய்வார்கள். மேலும், கடந்த கால தரவு பகுப்பாய்வு மூலம், ஜே.இ.இ-யில் அதிக முக்கியத்துவம் கொண்ட தலைப்புகள் எவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, உங்கள் நேரத்தை வீணாக்காமல் இலக்கை நோக்கி அழைத்துச் செல்வார்கள்.

2. நீண்ட நேரம் படிக்காதீர், 'ஸ்மார்ட்' ஆகப் படியுங்கள்!

முழுப் பாடத்திட்டத்தையும் மீண்டும் படிக்க முயற்சிப்பதை விட, தேர்ந்தெடுத்தப் படிப்பிற்கு (Selective Study) முன்னுரிமை கொடுங்கள். அதிக மதிப்பெண்கள் வரும் பகுதிகள், கடந்த 2 வருட வினாத்தாள்களில் அடிக்கடி வந்த முக்கியமான தலைப்புகள் ஆகியவற்றில் மட்டும் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நீங்க குறைவாகப் படிக்கும் அல்லது சிரமப்படும் கடினமான கருத்துகள் மற்றும் அத்தியாயங்களுக்காக 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் செலவிட வேண்டாம். இப்போது அந்த கடினமான பகுதிகளில் அதிக நேரம் முதலீடு செய்வது உங்கள் இலக்கிலிருந்து திசைதிருப்பும். அதற்குப் பதிலாக, முந்தைய 2 ஆண்டு வினாத்தாள்களைப் பகுப்பாய்வு செய்து, அதிக முன்னுரிமை கொண்ட கருத்துகளில் (Higher weightage variables) மட்டுமே படியுங்கள்.

3. தேர்வு செய். ஆய்வு செய். முன்னேறு. தொடரு! (Test. Analyze. Improve. Repeat)

வெறுமனே மாதிரித் தேர்வுகளை எழுதிக் கொண்டே இருப்பது மட்டும் வெற்றியல்ல. நீங்கள் கற்றுக்கொள்வது அந்தத் தேர்வுகளில் இருந்துதான். ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகும், தவறுகளை ஆய்வு செய்யக் கட்டாயம் நேரம் ஒதுக்குங்கள். "எந்தக் கருத்தில் மதிப்பெண்ணை இழந்தேன்?" "அந்தக் கேள்விக்கு ஏன் தவறாகப் பதிலளித்தேன்?" இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி, உடனடியாக அந்தக் கருத்துகளை மீண்டும் படியுங்கள். இந்தத் தவறுகளை ஆய்வு செய்யும் சுழற்சி (Feedback Loop), காலவரையறை கொண்ட JEE தேர்வில் உங்கள் துல்லியம் மற்றும் வேகத்தை நிச்சயம் மேம்படுத்தும்.

4. சமரசம் இல்லாத டைம் டேபிள் பின்பற்றுங்கள்!

கடினமான கேள்விகளைக் காட்டிலும், மோசமான நேர நிர்வாகத்தாலேயே அதிக மாணவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர். எனவே, திருத்தம் (Revision), பயிற்சிப் பிரச்சனைகள் (Practice Problems) மற்றும் மாதிரித் தேர்வுப் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, கண்டிப்பான தினசரி படிப்பு திட்டத்தை உருவாக்குங்கள். கடைசி நிமிடத் தயாரிப்புகளைத் தவிர்க்க, உங்கள் பாட நேரத்தைத் திட்டமிட்டுப் படியுங்கள். மேலும், கவனம் சிதறாமல் தொடர்ந்து படிக்கும் நேரம் மிக முக்கியம். உதாரணத்திற்கு, கவனச்சிதறல்களுடன் பத்து மணி நேரம் படிப்பதை விட, ஒருமித்த கவனத்துடன் 4மணி நேரம் படிப்பதுதான் சிறந்தது! சிறு இடைவெளிகளை எடுத்துக்கொண்டு சோர்வில்லாமல் படிப்பது வெற்றிக்கு அவசியம்.

5. தரமான ஆதாரங்களில் மட்டும் கவனம்!

இந்தக் கடைசி நேரத்தில், பல்வேறு புத்தகங்களுக்குத் தாவி நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்க இதுவரைப் பயன்படுத்திய குறிப்புகள், NCERT பாடப்புத்தகங்கள் மற்றும் சில நல்ல வினா வங்கிகள் என, ஒரே நல்ல ஆதாரத்தில் மட்டும் உறுதியாக இருங்கள். அவசர திருத்தத் தாள்கள் (Quick Revision Sheets) மற்றும் அத்தியாயப் பயிற்சிகள் மூலம் நீங்கள் வேகமாக நினைவுக்குக் கொண்டு வரலாம். நினைவில் கொள்ளுங்கள்: இப்போது அளவை விடத் தரமே முக்கியம்.

6. நெகிழ்வுத்தன்மை, ஆனால் கட்டுப்பாட்டுடன்!

சுய படிப்பு, வீடியோ விரிவுரைகள் அல்லது குழுப் படிப்பு உங்களுக்கு எது சிறந்தது என்று தோன்றுகிறதோ, அந்த முறையைப் பின்பற்றுங்கள். இப்போது நீங்க நேரத்தை 'செலவழிப்பவர்' ஆக இருக்ககூடாது; நேரத்தை 'திறம்பட பயன்படுத்துபவர்'ஆக இருக்கவேண்டும்.கவனச்சிதறல்களை தவிர்த்து, உங்கள் படிப்பு நேரத்தைக் காக்கும் கட்டுப்பாடு அவசியம். உங்களுக்குத் தேவையான விருப்பமும், ஒழுக்கமும் இருந்தால், வெறும் 3மாதங்களில் சரியான திட்டமிடல் மூலம் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும். நீங்கள் JEE-க்கு எவ்வளவுப் படித்தீர்கள் என்பதல்ல, எவ்வளவு திறம்படப் படித்தீர்கள், தொடர்ச்சியாகப் படித்தீர்கள் மற்றும் பயிற்சி மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டீர்கள் என்பதே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment