Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 1, 2025

தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்


தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூர் தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தண்ணீரை மட்டும் மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முதுநிலை விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் கார், ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கிரையோஜெனிக் என்ஜின் ராக்கெட்டுகளில் திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். எனவே, ஹைட்ரஜன் ஒரு முக்கியமான எரிபொருள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்நிலையில், ‘ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆனால் கார்பன் அற்றது’ என்று பொருள்படும் ‘HONC’ என்ற அடுப்பு மூலம் தண்ணீரைப் பயன்படுத்தி அடுப்பை எரித்து சமையல் செய்ய முடியும் என்ற செய்தி தற்போது ஊடகங்களில் பரவி வருகிறது.

தண்ணீர் என்பது H2o என்ற மூலக்கூறு அமைப்பைக் கொண்ட வேதிச் சேர்மமாகும். மின்பகுப்பு மூலம் இந்த நீர் மூலக்கூறை ஹைட்ரஜன் (H) மற்றும் ஆக்சிஜன் (0) என்று தனித்தனியாகப் பிரிக்க முடியும். தண்ணீர் எரிபொருளாக இருக்க முடியாது. ஆனால், நீர் மூலக்கூறிலிருந்து மின்பகுப்பு மூலம் பிரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் என்பதில் சந்தேகம் இல்லை.

நீர் மூலக்கூறில் இருந்து ஹைட்ரஜனை மின்பகுப்பு மூலம் தனியாகப் பிரிக்கும் செயல்முறைக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. வெறும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி அடுப்பை எரிக்க முடியாது. இந்த செயல்முறையில் மின்சாரம்தான் ஆற்றல் மூலம் எனில், அதுபற்றி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைப் பற்றி எதுவும் கூறாமல், தண்ணீரைப் பயன்படுத்தி அடுப்பு எரிக்கலாம் என்று கூறுவது சரியல்ல.

மின்பகுப்பு மூலம் நீரில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்து, அதன் மூலம் தான் அடுப்பு எரிகிறது எனில், அதற்கு தேவைப்படும் மின்சாரத்தின் அளவு, HONC அடுப்பில் கிடைக்கும் வெப்ப ஆற்றல், செயல்திறன், செலவு ஆகியவற்றுக்கும், இதே அளவு மின்சாரத்தை நேரடியாக ஒரு மின் அடுப்பில் பயன்படுத்துவதால் கிடைக்கும் வெப்ப ஆற்றலின் அளவு, செயல்திறன், செலவு ஆகியவற்றுக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து ஒப்பீடு செய்து தெரிவிப்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறு த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார். அறிவியல் இயக்க நிர்வாகிகள் டி.திருநாவுக்கரசு, முகமது பாதுசா, பி.ராஜமாணிக்கம், எஸ்.கிருஷ்ணசாமி, எஸ்.சுதாகர் உடனிருந்தனர்.

தனியார் நிறுவனம் விளக்கம்: அறிவியல் இயக்கத்தின் கருத்து தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாண் இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, “தண்ணீரில் ஹைட்ரஜன் இருப்பது அறிவியல் பூர்வமான உண்மை. தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைப் பிரிக்க மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் கூறியிருக்கிறோம் அறிவியல்பூர்வமான செயல்முறைகளின் அடிப்படையில்தான் இந்த புதிய அடுப்பை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.

No comments:

Post a Comment