JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, February 23, 2026

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: பறக்கும் படை பணிகளில் பி.டி. ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்களைப் பறக்கும் படையில் நியமிக்க வேண்டும். தகுதி இல்லை என கருதினால் எந்தப் பணியும் வேண்டாம் என உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தலைவர் சங்கர பெருமாள் தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களைப் பறக்கும் படை (Flying Squad) உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கர பெருமாள், அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது;

மார்ச் மாதம் தொடங்க உள்ள மேல்நிலைபள்ளி பொதுத்தேர்வு பணிகளில், அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணிகளில் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அவர்களைப் பறக்கும் படை பணிகளில் நியமிக்கத் தேர்வுத் துறை முன்வருவதில்லை.

பொதுத்தேர்வுப் பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்குத் தகுதி இல்லை என்று தேர்வுத் துறை கருதினால், அவர்களை அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்தவொரு தேர்வுப் பணிகளிலும் நியமிக்க வேண்டாம் எனச் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதால், அவர்களை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை மற்றும் அறை கண்காணிப்பாளர் ஆகிய இரு பணிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைத் தேர்வுத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் சங்கர பெருமாள் தனது செய்திக் குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment