
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா?
உச்சநீதி மன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வு தீர்ப்பு மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 31-08-2027 ஆம் நாளுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் கட்டாயப் பணி நிறைவு பெற்றுக்கொள்ள வேண்டும். இது தான் தற்போதைய தீர்ப்பின் நிலை.
ஒரு ஆசிரியருக்கு பள்ளியில் நூற்றுக்கணக்கான கற்பித்தல் கடமைகள் இருக்கின்றன. கடமைகளை ஒவ்வொரு ஆசிரியரும் ஒரே அளவில் நிறைவேற்றுவதில்லை.
கடமைகளை முழுமையாக நிறைவேற்றாமல் எல்லாவற்றையும் அறையும் குறையுமாக செய்துவிட்டு உச்ச நீதிமன்றம் விதித்த தகுதியைப் பெற்றுக் கொண்டால் போதும்.
அப்படியானவர்கள் தான் தகுதியுடைய ஆசிரியர்கள் என்று சட்டம் சொல்கிறது!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வர்களுக்கு இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த நிவாரணம் ஒன்றுமில்லை! உயர்நீதிமன்ற விசாரணையும் உச்ச நீதிமன்ற விசாரணையும் திசை மாறிப் போய்விட்டதை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஏதாவது ஒரு வகையில் தடையை ஏற்படுத்தினால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து பணியில் சேர்ந்தவர்கள் சிலர் தங்களுக்கு உடனே பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் காலி ஏற்படும் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமும் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வும் முலமும் நிரப்பப்படுகின்றன. பெரும்பாலும் கல்வித் துறையை பொறுத்த வரை எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்படுவதாக உள்ளது.
தங்களுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்கள் இதைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. தங்களுக்கு வேலை கிடைக்காத உண்மை காரணம் எதுவென்றும் சிந்திக்கவில்லை.
தனியார் பள்ளிகள் கட்டுக்கடங்காமல் அனுமதிக்கப்பட்டதால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதன் காரணமாக ஆசிரியர் நியமனங்கள் குறைந்து விட்டன.
உண்மையாகவே வறுமையில் இருக்கும் ஏழைகள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
ஆசிரியர் வேலை வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களின் பிள்ளைகள் கூட எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அல்லது அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள் எத்தனை பேர் என்றும் தெரியவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அரசால் வகுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களின் பதவி உயர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததன் மூலம் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு தற்போதைய தீர்ப்பு என்ன பயனளிக்கும் என்றும் தெரியவில்லை.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே புதிய ஆசிரியர் நியமனமும் ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வழக்கு தொடர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கான காரணங்களைப் பற்றி ஆராயாமல் தீர்ப்பளித்துள்ளது.
வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு இந்தத் தீர்ப்பினால் உரிய நிவாரணம் கிடைக்காமல் போனதற்கு இது தான் காரணம்.
ஒருவேளை வழக்கு சரியான திசை வழியில் நடந்திருந்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசுகள் செய்ய வேண்டியதை வலியுறுத்துவதாக தீர்ப்பு அமைந்திருக்கும். இதன் மூலம் ஆசிரியர்களுக்கும் பணி வாய்ப்புகள் உருவாகி இருக்கும்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அரசு ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மத்திய மற்றும் மாநிலஅரசுகள் இதைக் கண்டு கொள்ளவில்லை. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை பற்றி உச்சநீதிமன்றம் தானாக விசாரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் செயற்கை அதிகரிக்க உரிய ஆலோசனைகளை அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
பணியில் இருந்த ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு மேல் முறையீடு செய்தால் அரசுப் பள்ளிகளில் வேலை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
- சு.மூர்த்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு





No comments:
Post a Comment