
தமிழகத்தில் ஆகஸ்டில் வீட்டு பட்டியல், 2027 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டமாக கணக்கெடுப்பை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் மக்களின் பொருளாதார நிலையை அறியவும், நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய தமிழக அரசு 2 கட்டமாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக வீடு மற்றும் அங்குள்ள பொருட்கள் குறித்த பட்டியலும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். ஜூலை 11 முதல் 31 வரை பொதுமக்கள் தாங்களாவே வீடு, அதில் உள்ள பொருட்கள் பற்றிய சுய விபர கணக்கெடுப்பை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அடுத்ததாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணி ஆக.,1 முதல் 30 வரை நடைபெறும்.
இதில் வீடு தோறும் வரும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் இருக்கும் விண்ணப்பத்தில் வீட்டில் வசிப்பவர் பெயர், வீட்டு உரிமையாளர் பெயர், வீட்டில் உள்ள வாகனங்கள், எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் பொருட்கள் உட்பட 34 வினாக்கள் கேட்கப்பட்டு, அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அரசிடம் வழங்குவார்கள். இந்த விண்ணப்பத்தில் ஜாதிய ரீதியிலான கணக்கெடுப்பின்றி வீட்டில் வசிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதரர் என 3 ஜாதி பிரிவாக மட்டுமே கணக்கெடுப்பு எடுத்து கலெக்டர்கள் மூலம் அரசுக்கு அறிக்கையாக வழங்குவர்.
2027 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீட்டு கணக்கெடுப்பை அடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) பிப்.,ல் துவக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதில் குடும்ப தலைவர், தலைவி, உறுப்பினர்கள், இதர விபரங்களை பூர்த்தி செய்து அரசிற்கு அறிக்கையாக வழங்குவார்கள். இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை அறிய முடியும்.





No comments:
Post a Comment